அமெரிக்காவின் மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்றிற்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்த வைரஸ் மனிதர்களைக் கடந்து விலங்குகளையும் பாதிப்பது அண்மைக் காலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவின் பிராங்க்ஸ் மிருகக் காட்சி சாலையில் உள்ள ஆறு வயதான நாடியா என்ற புலிக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவில் விலங்குகளில் கண்டறியப்பட்டுள்ள முதல் பாதிப்பாகும். அதேபோல உலக அளவில் புலிகளில் கரோனா கண்டறியப்பட்டுள்ளதும் இதுவே முதன்முறை.
நாய்கள் மற்றும் பூனைகள் வாயிலாக இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவாது எனவும்,ஆனால் மனிதர்களிடம் இருந்து இந்த விலங்குகளுக்கு வைரஸ் பரவலாம் எனவும் ஹாங்காங் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 4 வயதான மலாயா புலியான நாடியா மட்டுமல்லாமல் அந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள ஆறு புலிகள் மற்றும் சிங்கங்களும் நோய்வாய்ப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்னும் அறிகுறிகள் தென்படாத மிருகக்காட்சிசாலையின் ஊழியரால் இவைப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.