உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. குறிப்பாக அமெரிக்க கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டில் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு கரோனா குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டி உலக நாடுகளுக்கு வழங்கி வருகின்றது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென குற்றம் சாட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவரும் நிதியை நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், "உலகமே கரோனாவை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறது. கரோனாவை வைத்து அரசியல் செய்யாதீர்கள். இந்த ஆபத்தான வைரஸை தோற்கடிக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பு மிக அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.