இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’, ‘கோவாக்சின்’ என்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில், கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்திருந்தது.
இந்தநிலையில் கரோனா தடுப்பூசியை தங்கள் நாட்டிற்கு வழங்குமாறு கம்போடியா பிரதமர் ஹன் சென், இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி, கம்போடியாவிற்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப இந்தியா ஒப்புதல் அளித்தது. அதனையடுத்து கம்போடியாவிற்கு தடுப்பூசி அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கம்போடியா பிரதமர் ஹன் சென், அவரது மனைவி, அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இந்தியாவின் தடுப்பூசியை முதல்முறையாக வெளிநாட்டுப் பிரதமர் ஒருவர் செலுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.