உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் விளாடிமிர் புதின், 5வது முறையாக அதிபராக இன்று (07-05-24) பொறுப்பேற்கிறார்.
ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் லியோனிட் ஸ்லட்ஸ்கி, புதிய மக்கள் கட்சி சார்பில் விளாடிஸ்லாவ் டாவன்கோவ், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் 88 சதவீத வாக்குகளைப் பெற்ற விளாடிமிர் புதின் மீண்டும் ரஷ்ய அதிபராக வெற்றி பெற்றார். இந்த நிலையில், விளாடிமிர் புதின் 5வது முறையாக ரஷ்ய அதிபராக இன்று (07-05-24) பொறுப்பேற்றார். ரஷ்ய வரலாற்றில் முதன் முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையைப் படைத்தார்.
கடந்த 1999ம் ஆண்டில் செயல் அதிபராக பதவியேற்ற புடின், 2000ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் முறையாக அதிபராக பொறுப்பேற்றார். 2008 வரை பதவியில் இருந்த அவர், அதன் பிறகு 2012 மே மாதம் முதல் தற்போது வரை அதிபராக நீடிக்கிறார்.