நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி எனும் பட்சத்தில், டொனால்ட் டிரம்ப் 295 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராகிறார். அதன்படி, வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார்.
அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார். இந்த நிலையில், டிரம்ப் பதவியேற்கும் முன் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்தியா உள்பட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்கு திரும்ப வருமாறு அமெரிக்காவில் உள்ள கல்லூரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் 54 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.