ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அந்தநாடு முழுவதும் தலிபான் வசமாகியுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை தொடர்பாக அமெரிக்கா மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் மக்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக வெள்ளை மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தாலிபன்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாகக் கைப்பற்றிய பிறகு, நேற்று முதல்முறையாக ஆப்கானிஸ்தான் குறித்து ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர், "எனது முடிவில் நான் உறுதியாக நிற்கிறேன். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு இதைவிட நல்ல சமயம் இல்லை. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்கள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானிஸ்தான் மக்கள் வரும் நாட்களில் வெளியேற்றப்படவுள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அழிவைத் தரும் வகையிலான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
தலிபான்கள் எதிர்பார்த்தைவிட வேகமாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றிவிட்டதாக கூறியுள்ள ஜோ பைடன், ஆப்கானிஸ்தான் தலைவர்களையும், இராணுவ வீரர்களையும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்கள் போராடாமல், நாட்டை விட்டு ஓடிவிட்டார்கள். சில இடங்களில் இராணுவம் போராட முயற்சிக்காமலேயே சரிந்தது. தங்களது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் ஆப்கானிஸ்தனுக்கு வழங்கினோம். ஆனால் தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் விருப்பத்தை மட்டும் அவர்களுக்கு எங்களால் தர முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோ பைடன், "ஆப்கான் வீரர்களே போராட விரும்பாத ஒரு சண்டையில், அமெரிக்கப் படைகள் இறக்கத் தேவையில்லை. இந்த முடிவடையாத சண்டையில், இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு அமெரிக்காவின் மகனும், மகளும் தங்களது உயிரை இழப்பார்கள்?" கேள்வியெழுப்பியுள்ளார்.