அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.