வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப் பொருள் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. இதனால், அங்குச் சட்டவிரோதமான செயல்கள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மெக்சிகோவில் நடக்கும் குற்றங்களுக்குப் போதைப்பொருளே அடிப்படை காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தடுப்பதற்குக் கடந்த 2006 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோ அரசாங்கம் ராணுவத்தை ஈடுபடுத்தியது. அதிலிருந்து மெக்சிகோ முழுவதும் பல்லாயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகவும், இதுவரை 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜலிஸ்கோ மாகாணம் ஓஜூலோஸ் நகரில் சந்தேகத்திற்கிடமாக கருப்பு பை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்த தகவல் மாகாண போலீசாருக்கு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கருப்பை பையை திறந்து பார்த்தபோது, அதில் 5 பேரில் உடல்கள் தலை இல்லாமல் இருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அருகே கிடந்த மற்றொரு கருப்பு பிளாஸ்டிக் பையைத் திறந்து பார்த்தபோது, அதில் 5 பேரில் தலை இருந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் மெக்சிகோவின் சில்பாசிங்கோ நகர் மேயர் பதவியேற்ற கொண்ட ஒரு வாரத்திற்குள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடந்த 1 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட நிலையில், போதைப்பொருள் கலாச்சாரத்தைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.