கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கோ, சொத்துக்களுக்கோ சேதம் ஏற்பட்டால் ஈரானின் முக்கியமான 52 இடங்களை குறித்து வைத்துள்ளதாகவும், ஈரானுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த 52 இடங்களை அதிவேகமாகச் செயல்பட்டு அழித்துவிடுவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஈரானின் கலாச்சாரச் சின்னங்களைத் தகர்ப்போம் என்ற டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு யுனெஸ்கோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக யுனெஸ்கோ அமைப்பின் தலைவர் அட்ரே அஜோலேவை யுனெஸ்கோவுக்கான ஈரான் தூதுர் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவும், ஈரானும் தங்களுக்கு இடையே எந்தவிதமான முரண்பாடுகள் ஏற்பட்டாலும் தங்கள் நாடுகளில் இருக்கும் கலாச்சார சின்னங்களைப் பாதுகாப்போம், இரு நாடுகளும் கலாச்சாரச் சின்னங்களைக் குறிவைத்துத் தாக்கமாட்டோம் என ஒப்பந்தம் செய்துள்ளதை இரு நாடுகளின் தலைவர்களுக்கும் நினைவுபடுத்துகிறோம்.
இதன்மூலம் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய கலாச்சார சின்னத்துக்கு எந்தவிதமான சேதங்களையும் ஏற்படுத்தக் கூடாது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2347-ன்டி எந்த நாட்டின் பாரம்பரிய, கலாச்சார சின்னங்களையும் அழிக்கக்கூடாது. அவ்வாறு அழிப்பது கண்டனத்துக்குரியதாகும்" என தெரிவித்துள்ளது.