
தர்மபுரி மதிகோண்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார்(32). இவருக்கு மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ரமேஷ்குமார் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த சூழலில் 5 வருடங்களுக்கு பிறகு அண்மையில் பரோலில் வந்த ரமேஷ்குமார், மனைவியுடன் குண்டலப்பட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார். ரமேஷ்குமார் சிறையில் இருக்கும் போது மனைவி மகாலட்சுமி அடிக்கடி வேறு ஒருவருடன் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த போது ரமேஷ்குமார் இதுகுறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் தகராறு ஏற்படவே, ரமேஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகாலட்சுமியைச் சரமாரியாக குத்தியுள்ளார். அதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் அறையில் ரமேஷ்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைபற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்திருக்கிறனர்.
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தர்மபுரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.