ஐநா சபையின் பருவநிலை தொடர்பான மாநாட்டில் உலக வெப்பமயமாதல் குறித்த அறிக்கையில், வெப்பநிலை உயர்வால் கடல்மட்டம் உயர்ந்து வருவதால், 2100 ஆம் ஆண்டுக்குள் கொல்கத்தா, மும்பை, சூரத் மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் கடல் நீர் உட்புகுவதால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரஸ், "வரும் 2050-ம் ஆண்டுக்குள் 45 சதவீத அளவுக்கு கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதேபோல பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால், புவி வெப்பமயமாவதால் அதிகரித்து, இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தாய்லாந்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 10 சதவீத மக்கள் வசிக்கும் நிலப்பகுதி கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளது" என கூறினார். ஏற்கனவே ஐ.நா சபை அறிக்கையில் இந்தியாவுக்கு ஆபத்து என கூறப்பட்ட நிலையில், தற்போது ஐ.நா பொதுச்செயலாளரும் அவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.