எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 32 பயணிகள் பலியாகி உள்ளனர். மேலும், நூறுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
உலகிலேயே அதிக அளவிலான ரயில் விபத்துகள் நடக்கும் நாடுகளில் ஒன்று எகிப்து. மோசமான ரயில்வே தடங்கள், கண்காணிப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், எகிப்தின் தென் பகுதியில் உள்ள தக்தா மாவட்டத்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 32 பயணிகள் பலியாகியுள்ளதோடு, 165 பயணிகள் படுகாயமடைந்துள்ள நிகழ்வு அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.
இதுகுறித்து அந்நாட்டு ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்ளூர் நேரப்படி காலை 11:42 மணியளவில் அஸ்வானில் இருந்து கெய்ரோ செல்லும் ஒரு ரயில், லக்சோரிலிருந்து அலெக்ஸாண்ட்ரியா செல்லும் ரயிலின் பின்புறத்தில் மோதியது. அலெக்ஸாண்ட்ரியா செல்லும் ரயிலில் இருந்த அடையாளம் தெரியாத பயணி ஒருவர் அவசரகால பிரேக்கை இழுத்ததால் அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரயிலின் மீது பின்னால் வந்த கெய்ரோ செல்லும் ரயில் மோதியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் விபத்திற்கு காரணமான பயணி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார் எனவும், விபத்து நடந்த பகுதியில் நிலவும் சூழல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி தெரிவித்துள்ளார்.