அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ‘அட்லஸ் - வி’ என்ற ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி கடந்த மாதம் 7 ஆம் தேதி (07.05.2024) காலை 08.04 மணிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கேப்டன் விச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணத்தை மேற்கொள்ள இருந்தனர். இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.
இத்தகையச் சூழலில் இவர்கள் இருவரும் பயணிக்க இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம் புறப்படுவதற்கு முன்னர் கடைசி நேரத்தில் (அதாவது 30 நிமிடத்திற்கு முன்னதாக) தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்றைய பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தப் பயணம் கடந்த மாதம் 8 ஆம் தேதி (08.05.2024) காலை 07.40 மணிக்குச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. போயிங் ஸ்டார்லைனர் திட்டத்தின் அடலஸ் - வி ராக்கெட்டின் ஆக்சிஜன் குழாய் புதிதாக மாற்றப்பட்ட பிறகு மே 17 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்கிறார் என நாசா சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தப் பயணமானது பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவருடன் புட்ச் வில்மோரும் பயணம் செய்கிறார். இதன் மூலம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸின் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய பயணமானது இந்திய நேரப்படி இன்று (05.06.2024) இரவு 08.17 மணியளவில் நிறைவேறி உள்ளது.