Skip to main content

போரை நோக்கி நகரும் ரஷ்யா? புதினின் கோரிக்கையை ஏற்ற ரஷ்ய நடாளுமன்றம்!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

putin

 

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில், நேற்று ரஷ்ய ஆதரவுப்பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.

 

இதற்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஜப்பான், கனடா ஆகிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

 

இதற்கிடையே புதினின் கோரிக்கையை ஏற்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை, ரஷ்யப் படைகளை தங்கள் நாட்டிற்கு வெளியேவும் பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. இதனால் ரஷ்யா போரை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேசமயம், ”மிகவும் சிக்கலான பிரச்சனைகளுக்கு இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளை எட்ட, நேரடியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா எப்போதும் தயார். ஆனால் ரஷ்யாவின் நலன்கள், எமது குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவை பேச்சுவார்த்தக்குட்பட்டது அல்ல” என புதின் தெரிவித்துள்ளார்.

 

இந்தச்சூழலில் உக்ரைன் நாடு, ரஷ்யாவில் உள்ள உக்ரேனியர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இராணுவ பயிற்சி பெற்ற 18 முதல் 60 வயதான பொதுமக்களை ஒரு வருடம் வரையிலான இராணுவ சேவைக்கு உக்ரைன் அதிபர்அழைத்துள்ளார்.

 

முன்னதாக உக்ரைன், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் பலியானதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்