பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பின்பு நேற்று நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தொழிலாளர் கட்சி 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி முன்னிலையில் உள்ளது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பிரிட்டனில் 650 இடங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் பின்னடைவு அக்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் வேட்பாளராக கொண்டு தொழிலாளர் கட்சி இந்த தேர்தலில் முன்னிலை வகித்து வருகிறது.