கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுபவர்களில் வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தப்பட்ட 80 சதவீத நோயாளிகள் உயிரிழந்துள்ளது நியூயார்க் மருத்துவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் மருத்துவர்கள் மத்தியில் புதிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கரோனா பாதிப்புக்காக வெண்டிலேட்டர்கள் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளது அந்நகர மருத்துவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டன், சீனாவிலும் கூட இதேபோல வெண்டிலேட்டர் மரணங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாகச் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சீனாவின் வூஹானில் வெண்டிலேட்டர்களில் வைக்கப்பட்டவர்களில் 86% பேர் மரணமடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தற்போது அமெரிக்காவிலும் இதே நிலை ஏற்பட்டுள்ள சூழலில், மருத்துவர்கள் வெண்டிலேட்டர்களைப் பயன்படுத்தவே அச்சப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாகத் தீவிர சுவாச நோய் உள்ள நோயாளிகளை வெண்டிலேட்டர்களில் வைத்தாலும் கூட நூற்றுக்கு 40-50 பேர் மரணமடைந்து விடுவார்கள். ஆனால் கரோனா சிகிச்சையில் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள். கரோனாவுக்கு முன்பு நோயாளியின் உடல்நிலை, சிறிய மூச்சுக்குழல் வழியாக அதிக அழுத்தத்திலான ஆக்சிஜனை செலுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இந்த மரணங்கள் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் ஏற்பட்டுள்ள இந்த வெண்டிலேட்டர் மரணங்களால் அமெரிக்காவில் வெண்டிலேட்டர் பயன்பாடுகளை முடிந்தளவு குறைத்து வருகின்றனர் மருத்துவர்கள்.