கரோனா வைரஸால் உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், தென்கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மூன் ஜே இன் மீண்டும் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபராகியுள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாக பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், தென்கொரியாவில் புதன்கிழமையன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளும்கட்சியே மீண்டும் வெற்றிபெற்று, மூன் ஜே இன் மீண்டும் அந்நாட்டின் அதிபராக உள்ளார். ஏற்கனவே தனது ஆட்சியின்போது மக்கள் செல்வாக்கை நன்கு சேகரித்திருந்த மூன் ஜே இன், கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விதம் அவரது செல்வாக்கை மக்கள் மத்தியில், மேலும் பல மடங்குகள் உயர்த்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவுக்கு மிக அருகில் இருக்கும் தென்கொரியாவில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கரோனா வைரஸின் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த பணி மக்கள் மத்தியில் ஆளும்கட்சியின் செல்வாக்கை உயர்த்திப்பிடித்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்நாட்டின் 300 இடங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 65 சதவீத மக்கள் வாக்களித்தனர். கரோனா வைரஸ் தொற்று பரவலை திறமையாகக் கையாண்டு கட்டுப்படுத்தியதற்கு தென்கொரிய மக்கள், மூன் ஜே இன்னுக்கு கொடுத்த பரிசு இது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.