பிரான்ஸிலிருந்து இந்தியா வந்துகொண்டிருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்கக் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து, அண்மையில் இறுதிசெய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, மே மாதம் இந்தியாவிற்கு ஐந்து ரஃபேல் விமானங்களை வழங்க பிரான்ஸ் உறுதி அளித்திருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கம் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால், இப்போதுதான் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று காலை பிரான்ஸிலிருந்து புறப்பட்ட இந்த விமானங்கள் நாளை ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், இந்த ரஃபேல் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் திட்டமிட்டபடி தரையிறக்கப்பட்டுள்ளன.