அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் தனது பணியைத் துவங்கியுள்ள அந்நாட்டின் புதிய அதிபர், அங்கு பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட குழப்பங்களுக்கும் களேபரங்களுக்கும் பிறகு அந்நாட்டில் 46 ஆவது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றுள்ளனர். அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, உலக சுகாதார அமைப்பில் இணைவது, இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது, மெக்ஸிகோ எல்லைப்பகுதியில் சுவர் எழுப்புவதை நிறுத்துவது உள்ளிட்ட 15 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்நிலையில், ட்ரம்ப் அதிபராக இருந்தபோது அவரது மேசையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பட்டனை தற்போது பைடன் அகற்றியுள்ளார்.
ஆனால் இந்த பட்டன், வடகொரியாவை மிரட்டும்போது, ட்ரம்ப் சொன்ன அணு ஆயுதங்களை ஏவும் பட்டன் கிடையாது. இது ட்ரம்ப்பிற்கு கோக் தேவைப்பட்டால் அழுத்தும் பட்டனாக இருந்துள்ளது. ட்ரம்ப் இந்த பட்டனை அழுத்தும்போதெல்லாம், அலுவலகப் பணியாளர் ஒருவர் அவருக்கு ஒரு வெள்ளித் தட்டில் டயட் கோக் கொண்டுவந்து கொடுப்பார். இப்படி ஒருநாளைக்கு 12 கோக்குகள் வரை ட்ரம்ப் குடிப்பது வாடிக்கையாம். இந்நிலையில், தற்போது புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் பைடன் இந்த பட்டனை அகற்றியுள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றது முதல், வெள்ளை மாளிகை பகுதியில் பல்வேறு அலங்கார மாற்றங்களை பைடன் மேற்கொண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.