ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர், டிமிட்ரி பெஸ்கோவ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரையும் பாதித்து வருகிறது கரோனா. உலக நாடுகளில் அதிகாரத்தில் இருப்பவர்களும் இதிலிருந்து தப்பவில்லை. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இதுவரை மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சூழலில், ரஷ்ய அதிபர் மாளிகையிலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கரோனா பரவல், தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த பத்து நாட்களில் அந்நாட்டில் புதிதாக 1,00,000 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுளார். டிமிட்ரி, இறுதியாக அதிபர் புதினுடன் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.