கரோனா வைரஸால் மிகமோசமாக பாதிக்கப்பட்டு வரும் பிரேசில் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 90 லட்சத்திற்கு மேலானவர்களை பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் 4.71 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கோ அல்லது தடுப்பதற்கோ எந்தவித மருந்துகளும் இதுவரை அதிகாரபூர்வமாக கண்டறியப்படாத நிலையில், உலக நாடுகள் பலவும் தனிமனித சுகாதாரம், சமூக இடைவெளி உள்ளிட்ட அடிப்படை கூறுகளை தீவிரமாக செயல்படுத்தி, இந்த வைரஸின் பாதிப்புகளை குறைத்து வருகின்றன. ஆனால், ஆரம்பம் முதலே கரோனா வைரஸ் தடுப்பில் மெத்தனமாக செயல்பட்டதன் விளைவை பிரேசில் தற்போது உணர ஆரம்பித்திருக்கிறது.
ஆரம்பம் முதலே சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வோ, ஊரடங்கோ எதுவும் பின்பற்றப்படாத நிலையில், தற்போது அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல இதுவரை அந்நாட்டில் 50,000க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 50,000 இறப்புகளை கடந்த இரண்டாவது நாடாக பிரேசில் மாறியுள்ளது மக்களை கவலையடைய வைத்துள்ளது.