பப்ஜி உள்ளிட்ட 275 செயலிகளை, பாதுகாப்பது காரணங்களுக்காக தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா, சீனா இடையேயான எல்லைப்பிரச்சனையை தொடர்ந்து சீனாவின் 59 செயலிகளைப் பாதுகாப்பு குறைபாடுகளைக் காரணம் காட்டி மத்திய அரசு தடை செய்தது. இந்த முடிவு இந்தியர்கள் மத்தியில் கலவையான பின்னூட்டங்களைப் பெற்றிருந்தாலும், சீனா இந்த விவகாரத்தில் கவலையடைந்துள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகளில் 47 செயலிகளின் குளோன் செயலிகள் இந்தியாவில் செயல்பட்டு வந்த நிலையில், அவற்றை கண்டறிந்து, அதுபோன்ற 47 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த சூழலில், மேலும் 275 செயலிகள் பட்டியலிடப்பட்டு, அவற்றின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய அரசு, இவற்றையும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பப்ஜி, அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல முன்னணி செயலிகளும் கண்காணிப்பில் உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து பப்ஜி தடை செய்யப்படலாம் என்ற கவலை தற்போதே பப்ஜி பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.