இளைய தலைமுறையினர்கள் சிகரெட் வாங்குவதையும், பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
சிகரெட் புகைக்கும் வயதை உயர்த்தும் வகையில், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் புதன்கிழமை முன்மொழிந்தார். மேலும், இளைய தலைமுறையினர் சிகரெட் வாங்குவதைத் தடை செய்யவும் அவர் கேட்டுக்கொண்டார். ஒருவேளை இது சட்டமாக்கப்பட்டால் உலகிலேயே மிகக் கடுமையான புகைபிடித்தலுக்கு எதிரான சட்டங்கள் எனலாம். அதேசமயம், குழந்தைகளுக்கு சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யும் ஐரோப்பாவின் முதல் நாடாக பிரிட்டன் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, 2040க்குள் இளைஞர்களிடம் இருக்கும் புகைப்பழக்கத்தை அகற்றிவிடலாம் எனவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இது பற்றி பிரதமர் சுனக் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் புகைபிடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்தி, படிப்படியாக இளம் தலைமுறையினரை ஸ்மோக் ஃப்ரீ சமூகமாக மாற்றி உடல் ஆரோக்கியத்தையும் தேற்றலாம்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “புகைபிடிப்பதால் பிரிட்டனின் மருத்துவ சேவைகளுக்கு மட்டும் ஆண்டுக்கு 17 பில்லியன் பவுண்டுகள் ($20.6 பில்லியன்) செலவிடப்படுகிறது. மாறாக, மக்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளையும் கால் பங்கு அளவு குறைக்கலாம். இந்தக் கொள்கை, சில பெரிய சிகரெட் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்ற புகைபிடித்தல் தடைச் சட்டத்தை கடந்த ஆண்டு நியூஸிலாந்து அரசும் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சட்டம் 2027ல் அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.