புனித வியாழனான நேற்று வாடிகன் நகரில் நடந்த தூய்மை சடங்கில் பங்கேற்ற போப் பிரான்சிஸ் தெற்கு சூடான் நாட்டின் அரசியல் தலைவர்களின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சூடான் கடந்த 2011 ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்தது. அது முதல் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் அங்கு கடும் பஞ்சமும், நிலையற்ற பொருளாதார சூழலும் நிலவி வருகிறது. இந்நிலையில் அந்த உள்நாட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரி நேற்று நடந்த விழாவில் போப் பிரான்சிஸ் தெற்கு சூடானின் அரசியல் தலைவர்களின் காலில் விழுந்து அவர்களின் கால்களில் முத்தமிட்டு போரை நிறுத்த வேண்டினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தெற்கு சூடான் தலைவர்கள் குழப்பத்தில் நின்றனர்.இது குறித்து தெற்கு சூடானின் துணை அதிபர்களில் ஒருவரான ரெபேக்கா கரங் கூறும்போது, ''இதுபோன்ற நிகழ்வை நான் பார்த்ததே இல்லை. அவர் அப்படி செய்த போது என்னை அறியாமல் நான் அழ ஆரம்பித்து விட்டேன்'' என்றார்.