பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு நடத்துவது மாதிரியான வீடியோகேம் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக பள்ளிகள் மற்றும் நிறுவனங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்தத் தாக்குதல்களில் சிக்கிய பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் சட்டத்திருத்தம் வேண்டும் என லட்சக்கணக்கான மாணவர்கள் அதிபர் ட்ரம்ப்பிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில், பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவது மாதிரியான வீடியோ கேம் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. வால்வ் என்ற நிறுவனம் வரும் ஜூன் 6ஆம் தேதி வெளியிட இருக்கும் இந்த வீடியோ கேமிற்கு, ஆக்டிவ் ஷூட்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கேமை விளையாடுபர் ஸ்வாட் அதிகாரியாக செயலாற்றி காக்கவேண்டும். அல்லது கொலைகாரனாக மாறி வேட்டையாட வேண்டும்.
விலை நிர்ணயம், விளம்பரம், விநியோகம் என பரபரத்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோ கேமை ரிலீஸ் செய்ய பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வால்வ் நிறுவனம் பல விளக்கங்கள் தந்தும் மக்களின் கோபம் குறையவில்லை. இதற்கு முன்னர் இதுபோன்ற பல வீடியோ கேம்கள் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.