மொபைல் போன் திருடியதாகக் கூறி 14 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிட்டு மின்சாரம் பாய்ச்சி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், மகேஷ்தலா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் மொபைல் போன் திருடியதாகக் கூறி அவரை தலைகீழாக தொங்கவிட்டு மின்சாரம் பாய்ச்சி தொழிற்சாலை உரிமையாளரான ஷாஹென்ஷா என்பவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதில் ஷாஹென்ஷா குறைவான ஊதியம் கொடுத்து சிறார்களை வேலைக்கு அமர்த்துவதாக சிறுவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் இருப்பிடம் மற்றும் அவரது தற்போதைய நிலை என்னவென்று தெரியாமல் குடும்பத்தினர் சிக்கித் தவிக்கின்றனர்.
இதற்கிடையில், தலைமறைவான ஷாஹென்ஷா மும்பையில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாஹென்ஷாவுடன் நெருங்கிய தொடர்புடைய முஸ்தபா கமால் மற்றும் தௌஹித் ஆலம் என இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிறுவனைத் தேடும் பணியில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.