ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு நிச்சயம் நடைபெறும் என தென் கொரிய பிரதமர் லீ நக் யோன் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த போர்ப்பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது இருநாட்டு அதிபர்களுக்கு இடையிலான சந்திப்பு. கொரிய நாடுகளின் எல்லையில் வைத்து நடைபெற்ற இந்த சந்திப்பில், அணு ஆயுத ஒழிப்பு குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திக்கும் தேதியும் உறுதியானது. சிங்கப்பூரில் வரும் ஜூன் 12 அன்று இவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்தில் இந்த சந்திப்பை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு வடகொரியா - சீனா இடையே இருக்கும் உறவை அமெரிக்கா காரணமாக தெரிவித்தது.
இந்நிலையில், கிம் - ட்ரம்ப் இடையிலான சந்திப்பு நிச்சயம் நடைபெறும் என தென் கொரிய பிரதமர் லீ நக் யோன் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரிய தீபகற்பத்தில் நிறைய மாற்றங்கள் நிலவுகின்றன. இதே அமைதி தொடர்ந்து நிலவுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு உறுதுணையாக இருக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்ற உறுதி மற்றும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.