ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்களை பகுதியளவே கரோனாவிலிருந்து காப்பாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கரோனாவுக்கு அதிவேகத் தடுப்பூசி ஒன்றை தயாரித்து வருவதாகவும், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி வெற்றிகரமாகப் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், தடுப்பூசி கண்டறியப்பட்ட குரங்குகளின் மீது இது சோதனை செய்யப்பட்டது. ஆறு ரீசஸ் குரங்குகளுக்கு இந்த தடுப்பு மருந்து அண்மையில் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த குரங்குகள் அனைத்திலும் கரோனா தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஹசெல்டின் கூறுகையில், "தடுப்பூசி போடப்பட்ட ஆறு குரங்குகளையும் சோதித்தபோது, தடுப்பூசி போடப்படாத மூன்று குரங்குகளின் மூக்கில் எவ்வளவு கரோனா வைரஸ் இருந்ததோ, அதே அளவு தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் மூக்கிலும் இருப்பது தெரியவந்தது. அதாவது, 90 மில்லியன் பவுண்டுகள் செலவில் தயாரிக்கப்படும் இந்த கரோனா தடுப்பூசி, கரோனாவை தடுக்காமல் போகலாம் என்பதைத்தான் இது காட்டுகிறது. தடுப்பூசி போடப்பட்ட அனைத்து குரங்குகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. இதையே மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தடுப்பூசி போடப்படும் மனிதர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும், அதனை அவர்களால் தொடர்ந்து ஏராளமானோருக்கு பரப்பவும் முடியும்" எனத் தெரிவித்தார்.