Skip to main content

கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் உட்புகுவதைத் தடுத்திட நெறிச்சுவர் அமைக்கும் பணி!

Published on 27/04/2025 | Edited on 27/04/2025

 

Construction of a retaining wall to prevent salt water intrusion into the Kollidam River

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒட்டரப்பாளையம் கிராம எல்லையில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும், கடல் நீர் உட்புகும் அபாயம் இருப்பதாலும், இப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பு நீராக மாற வாய்ப்பு உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் தரைகீழ் நீர் நெறிச்சுவர் அமைக்க கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க ஒட்டரப்பாளையம் கிராம எல்லைக்கும் மற்றும் மயிலாடுதுரை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் பால்ரான்படுகை கிராம எல்லைக்கும் இடையில் கொள்ளிடம் ஆற்றின் தரைகீழ் நீர் நெறிச்சுவர் ரூ.89.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அடிக்கல் எடுத்து வைத்து பணியை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த சுவர் 8 மீட்டர் ஆழத்திலும் 0.75 மீட்டர் அகலத்திலும் 1360 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட உள்ளது. மேலும் சுவற்றில் இரு பக்கங்களிலும் தலா 400 மீட்டர் நீளத்திற்கு காங்கிரீட் சாய்தளம் அமைக்கப்படவுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் ஆச்சாள்புரம், எய்யலூர், ஓமாம்புலியூர், முட்டம், குஞ்சமேடு, மா.புளியங்குடி, அரசூர், வெள்ளுர், கீழப்பருத்திக்குடி மற்றும் முள்ளங்குடி ஆகிய கிராமங்களின் எல்லையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை ஆகிய வட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர் தடுப்புச்சுவர் அமைப்பதால் கொள்ளிடம் ஆற்றின் தள மட்டத்திற்கு கீழ் நிலத்தடி நீரோட்டத்தினை தடுத்து, தேக்கி நிலத்தடி நீரினை செரிவூட்டலாம். 

Construction of a retaining wall to prevent salt water intrusion into the Kollidam River

மேலும், குடிநீர் வடிகால் வாரியத்தின் உறுஞ்சு கிணறுகள் மூலம் உறுஞ்சப்படும் நீரினால் ஏற்படும் நிலத்தடி நீர்மட்ட ஏற்றத் தாழ்வினால் கடல்நீர் உட்புகுதல் தடுத்து நிலத்தடி நீர் உப்புத்தன்மை அடைவதும் தடுக்கப்படும். ஒட்டரப்பாளையம் மற்றும் பால்ரான்படுகை ஆகிய கிராமத்தின் மேற்பகுதியில் உள்ள சுமார் 25 கிராமங்களின் நிலத்தடிநீர் பாதுகாக்கப்படும். மேலும், சுமார் 12500 ஏக்கர் விளை நிலங்களும் பயன்பெறும். மேலும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் உறுஞ்சு கிணறுகளுக்கும் விவசாய ஆழ்குழாய் கிணறு மற்றும் அடிக்குழாய்களுக்கும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும். இப்பகுதியில் அமைந்துள்ள 250 க்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் உவர்நீராக மாறாமல் தடுக்கப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபிஆதித்யா செந்தில்குமார், சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார், கொள்ளிடம் வடிநில கோட்டம் கண்காணிப்பு பொறியாளர் மரியசூசை, நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்