2023 ஆம் ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று முன்தினம் (02.10.2023) அறிவித்திருந்தது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் எம்.ஆர்.என்.ஏ (mRNA) வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று (03.10.2023) அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் இ.புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ.எகிமோவ் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது; குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்துத் தொகுத்ததற்காக நோபல் பரிசு வழங்குவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.