உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துவரும் கரோனாவிடமிருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது மிகவும் அவசியமாக உள்ளது. கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்பிறகு, கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததோடு, உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதன்தொடர்ச்சியாக, இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டதையடுத்து, பொதுவெளியில் முகக்கவசம் அணிவதிலிருந்து நாட்டு மக்களுக்கு விலக்கு அளித்தது இஸ்ரேல். இந்தநிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், முக்கியமான பரிந்துரையை வெளியிட்டது.
கரோனா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட அமெரிக்க மக்கள், முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறியுள்ளதோடு, இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்தது. இதனையடுத்து இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டியதில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிவிப்பையடுத்து, வெள்ளை மாளிகையில் முகக்கவசம் இன்றி செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன், “இது ஒரு சிறந்த மைல்கல் என்று நினைக்கிறேன். ஒரு சிறந்த நாள். நிறைய அமெரிக்கர்களுக்கு விரைவாக தடுப்பூசி போடுவதில் நாம் பெற்ற அசாதாரண வெற்றியால் இது சாத்தியமானது. நீங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தால், இனி முகக்கவசம் அணிய தேவையில்லை" என தெரிவித்தார்.
அதேநேரத்தில் ஜோ பைடன், “தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், தடுப்பூசியின் முதல் டோஸை மட்டும் எடுத்துக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸை எடுத்துக்கொண்டு 14 நாட்கள் ஆகாதவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்” என கூறியுள்ளார்.