இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகித்து வந்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அனைத்து அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தையும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று வழங்கினார். அதனைத் தொடர்ந்து, நான்கு அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை நேற்று பதவியேற்றுக்கொண்டது. பின், அனைத்துக் கட்சிகள் அடங்கிய காபந்து அரசு அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.
நேற்று பதவியேற்றுக்கொண்ட இடைக்கால அமைச்சரவையில் இருந்து நிதி அமைச்சர் அலி சப்ரி திடீரென தனது பதவியை இன்று ராஜினாமா செய்த நிலையில், ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 40க்கும் மேற்பட்டோர் திரும்பப் பெற்றனர். இதனால் இலங்கையின் ஆளும் கூட்டணி அரசு தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் இலங்கை பொதுஜன பெரமுன அரசு கவிழ்க்கப்பட வாய்ப்புள்ளதால் ராஜபக்சே சகோதரர்களுக்கு தற்போது நெருக்கடி அதிகரித்துள்ளது.