அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில், ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நோக்கி நேற்று முன் தினம் (30-01-25) இராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது, சிறிய ரக பயணிகள் விமானம் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க வரலாற்றில் அரங்கேறிய கொடூர வான் விபத்துக்களில் ஒன்றாக இந்த துயர சம்பவம் பார்க்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை மீறி கீழே விழுந்து விபத்தானது. விமானம் கீழே விழுந்ததில், பல வீடுகள் மீது மோதியது. இதனால், அங்கு தீ விபத்தானது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விமானத்தில் இருந்த 2 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர் விமானம் மோதி 67 பேர் உயிரிழந்த, சில நாட்களிலேயே மீண்டும் நடந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.