முதன்முறையாக பள்ளிகளில் கணினியை ஒரு பாடமாக பயின்றவர்கள் 90ஸ் கிட்ஸாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட 90ஸ் கிட்ஸ் குழந்தை பருவத்தில் பெரும் சாதனையாகவும், தங்கள் திறமையை காட்டும் செயலாகவும் கருதியது எம்.எஸ் பெயிண்ட் மென்பொருளில் படங்கள் வரைந்து அதனை மற்றவர்களுடன் பகிர்வதை தான்.
இன்று வரை பல 90ஸ் கிட்ஸ் எம்.எஸ் பெயிண்ட் மென்பொருளை பொழுதுபோக்காக பயன்படுத்துவத்துண்டு. அப்படிப்பட்ட எம்.எஸ் பெயிண்ட் மென்பொருளை 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த முடிவை திரும்ப பெற்றது.
இந்நிலையில் தற்போது வரும் விண்டோஸ் 10 ன் புதிய அப்டேட்டில் இந்த எம்.எஸ். பெயிண்ட் நீக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இது குறித்து தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ் பெயிண்ட் புதிய விண்டோஸிலும் தொடரும் எனவும், தற்போதைக்கு அதனை நீக்கும் எண்ணம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட்டின் இந்த அறிவிப்பை பல 90ஸ் கிட்ஸ் மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.