மாயன் நாட்காட்டியின் கணக்கின்படி, வரும் ஜூன் 21 தான் உலகின் கடைசி நாளாக இருக்கலாம் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் மீண்டும் எழுந்துள்ளது.
எதிர்காலம் குறித்த பல கணிப்புகளை மாயன் மக்கள் மிகத்துல்லியமாகக் கணித்துள்ளதாக நம்பும் ஒருசில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், உலகின் அழிவையும் மாயன் நாட்காட்டி கணித்துள்ளதாக நம்புகின்றனர். அந்த வகையில், மாயன் நாட்காட்டியின்படி கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழிந்துவிடும் என்று செய்தி உலகம் முழுவதும் பரவி கடும் விவாதத்திற்கு உள்ளானது. இதனை மையமாக வைத்து ஹாலிவுட்டில் படமும் எடுக்கப்பட்டு ஹிட் அடித்தது. ஆனால், 2012 ஆம் ஆண்டு அதுபோன்ற எந்தச் சம்பவமும் நடைபெறாத நிலையில், தற்போது இதேபோன்ற ஒரு கணிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. சதிக்கோட்பாட்டாளர்களின் புதிய கணக்கின்படி, மாயன் நாட்காட்டியில் கூறியபடி பார்த்தால், வரும் ஜூன் 21-ஆம் தேதி தான் உலகின் கடைசி நாள் என புதிய விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.
விஞ்ஞானி பாலோ டகாலோகுயின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஜூலியன் நாட்காட்டியை நாம் பின்பற்றும்போது அந்த காலண்டர்படி நாம் இப்போது 2012-ஆம் ஆண்டில்தான் இருக்கிறோம். ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறும் ஆண்டு ஓராண்டில் 11 நாட்களைக் குறைத்துக் கணக்கிட்டுள்ளோம்.
அதாவது கடந்த 1752-ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் கிரிகோரியன் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. 2020 ஆம் ஆண்டிலிருந்து 1752 ஆம் ஆண்டைக் கழித்தால் ஏறக்குறைய 268 ஆண்டுகளாக நாம் 11 நாட்களைக் கணக்கிடவில்லை.
அப்படியென்றால் 11 x 268 பெருக்கினால் 2,948 நாட்களைச் சேர்க்க வேண்டும். 2,948 நாட்களை 365 நாளில் வகுத்தால் (365 நாட்கள் - ஓராண்டு) 8 ஆண்டுகள் கிடைக்கிறது. அதாவது 8 ஆண்டுகளை நாம் கணக்கிடவில்லை. அதாவது தற்போது இருக்கும் 2020-ஆம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகளைக் கழித்தால் 2012-ஆம் ஆண்டு. ஜூலியன் நாட்காட்டி படி நாம் தற்போது 2012-ஆம் ஆண்டில் இருக்கிறோம்" எனத் தெரிவித்தார். இந்தப் பதிவிற்குப் பிறகு உலகம் அழிவது குறித்த விவாத சமூக ஊடகங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் நாட்காட்டி முறையை வந்தாலும், 1582-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மாயன் நாட்காட்டி, ஜூலியன் நாட்காட்டி ஆகியவற்றையே மக்கள் பயன்படுத்தி வந்தனர். எனவே ஜூலியன் நாட்காட்டி கோட்பாட்டின்படி, வரும் 21-ஆம் தேதிதான் மாயன் நாட்காட்டி குறிப்பிட்ட 2012, டிசம்பர் 21-ஆம் தேதியாகும். எனவே இந்த நாளே உலகின் கடைசி நாளாக இருக்கலாம் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. ஆனால், இதுவரை இந்த விவகாரத்தில் விஞ்ஞான பூர்வமான முடிவுகள் அல்லது விளக்கங்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.