பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் குறித்த நடிகை மியா கலிஃபா தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், மற்றும் இஸ்ரேலை சேர்ந்த பொதுமக்கள் பலரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதற்கு கடுமையான பதிலடிகளை இஸ்ரேல் தரப்பு கொடுத்து வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஊடகப் பிரபலமும், நடிகையுமான மியா கலிஃபா இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக மியா கலிஃபா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நீங்கள் பாலஸ்தீனியர்களின் பக்கம் நின்று இந்த விசயத்தை பார்க்கவில்லை என்றால், நிறவெறியின் தவறான திசையில் இருக்கிறீர்கள் என்பதனை வரலாறு உங்களுக்கு காண்பிக்கும்” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பு ஒருசேர வரத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவின் பிரபல லைப்ஸ்டைல், பொழுதுபோக்கு பத்திரிக்கையான பிளேபாய் நிறுவனம் மியா கலிஃபாவுடனான ஒப்பந்தத்தை நீக்கியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் தனது பத்திரிகை வாசகர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “பிளேபாய் இதழின் கிரியேட்டர் தளத்தில் இருந்து மியாவின் சேனலை நீக்குகிறோம். தொடர்ந்து, இவருடனான வணிக உறவையும் முறித்துவிட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என அனுப்பியுள்ளது.
இது மட்டுமின்றி மியா கலீஃபா, கனடாவில் சிரியஸ் எக்ஸ்.எம். என்ற நிறுவனம் நடத்தும் பாட்காஸ்ட் மற்றும் ரேடியோ நிகழ்சிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது பற்றி அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் டாட் ஷாபிரோ எக்ஸ் பக்கத்தில் மியாவை டேக் செய்து, “இது ஒரு பயங்கரமான ட்வீட் மியா கலீஃபா. உங்களை இந்த நிமிடமே நிறுவனத்தில் இருந்து நீக்கிவிட்டோம் என்பதாக எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்த ட்வீட் அருவருப்பாகவும், அருவருப்புக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. தயவு செய்து கொஞ்சமாவது பரிணாம வளர்ச்சி அடைந்து சிறந்த மனிதராக உருவெடுங்கள். அதேசமயம், மரணம், வன்கொடுமை, தாக்குதல் மற்றும் பிணையக்கைதிகளை எதிர்த்தல் போன்றவற்றை நீங்கள் மன்னிப்பது மிகவும் மோசமான செயல். இதுபோன்ற, அறியாமையை எந்த வார்த்தை கொண்டும் விளக்க முடியாது. குறிப்பாக இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் போது மனிதர்கள் ஒன்றுபட தான் வேண்டும். இருந்தும், நீங்கள் நல்ல மனிதராக மாறிவருவதற்கு நான் பிரார்த்திக்கிறேன். ஆயினும், தற்போது இது உங்களுக்கு மிகவும் தாமதமானது போல் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.