உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நான்காவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150- க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயணிகளை அண்டை நாடுகளின் வழியாக மீட்டு வருகின்றனர் வெளிநாட்டு தூதரகங்கள்.
அந்த வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, உக்ரைனின் அண்டை நாடுகளில் விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றன. மேலும், இரவு, பகல் பாராமல் வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அதன் பயனாக நான்கு விமானங்கள் மூலம் சுமார் 907 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
எனினும், உக்ரைனில் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படையினர் மற்றும் உக்ரைன் ராணுவத்தினர் இடையேயான கடுமையான தாக்குதல் நிகழ்ந்த வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு, தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம். சண்டைத் தீவிரமாக நடப்பதால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம்; இச்சூழலில் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல. ஊரடங்கு ரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் நேரத்தில் ரயில் நிலையங்களுக்கு செல்லலாம்; பாதுகாப்பாக இருங்கள்; பாதுகாப்பான இடங்களில் தங்கியிருங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளது.