வடகொரியா அதிபர் கிம் ஜங் உன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்களை வடகொரியா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகச் சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த 15- ஆம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. அதிபர் பதவியேற்றது முதல் இந்த விழாவில் அவர் பங்கேற்காதது இதுவே முதன்முறையாகும்.
கிம்மின் உடல்நிலை குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருந்த நிலையில், வடகொரியச் செய்திகளைச் சேகரித்து வெளியிடும் தென்கொரியச் செய்தி நிறுவனம் ஒன்று, கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் இப்போது அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவித்தது. மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என அண்மையில் தெரிவித்தார். இதனையடுத்து கிம் ஜாங் உன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவைச் சீனா அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் 20 நாட்கள் இடைவெளிக்குப் பின் உரத்தொழிற்சாலை ஒன்றின் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டதாக வடகொரிய ஊடகம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ அவரது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.