உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன்வசப்படுத்திக் கொண்டார். ட்விட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றத்தைச் செய்த எலான் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உட்பட ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து அதிரடியாக நீக்கினார். இதனிடையே செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்திலிருந்து துர்நாற்றம் வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ட்வீட்டரில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினர். ஆனால், அதனைச் சிறிதும் பொருட்படுத்தாத எலான் மஸ்க், அவர்கள் அனைவரையும் வேலையிலிருந்து நீக்கினார். அதனால் ட்விட்டர் தலைமையகத்தில் சுத்தம் செய்ய ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிப்பறைகளை சுத்தம் செய்யக்கூட ஆளில்லாததால் ட்விட்டர் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தலைமையகத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பலரும் கூறுகின்றனர்.