பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அஜய் லால்வானி. இவர், சலூன் கடையில் அமர்ந்திருக்கும்போது, மர்ம நபர்களால் சுடப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அஜய் லால்வானி உயிரிழந்தார். இந்த கொலைக்கு காரணமாக இருந்தது அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரமிக்க அரசியல்வாதி எனக் கருதப்படுகிறது. அந்த அரசியல்வாதி, இந்துப் பெண்களை மதம் மாற்றுவதில், முக்கியப் பங்கு வகிப்பவர் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியும், குற்றவாளியைக் கைது செய்யவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாகிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர் சங்கமும், இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
கடந்த ஒருவருடத்தில் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்காவது பத்திரிகையாளர் அஜய் லால்வானி என அவரின் நண்பர் தெரிவித்துள்ளார். அஜய் லால்வானியின் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லால் சந்த் மல்ஹி, கொலையில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்யுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். அஜய் லால்வானி கொலை செய்யப்பட்ட சம்பவம், சிந்து மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.