கரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும், உலக நாடுகளில் கரோனா தற்போது வேகமெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்தநாட்டின் பல்வேறு மாகாணங்கள், தங்கள் எல்லைக்குள் வேறு மாகாணத்தினர் நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தநிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 2,477 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது டோக்கியோவில், ஒரு நாளில் பதிவாகியுள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனைத் தொடர்ந்து டோக்கியோவிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகரில் அறிவிக்கப்பட்டுள்ள அவசரநிலை, பிப்ரவரி 7 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இரவு 8 மணிக்கு மேல் திறந்து வைத்திருக்கக் கூடாது. தேவையற்ற விஷயங்களுக்காக குடிமக்கள் வெளிவருவதை தவிர்க்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு டோக்கியோவிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விதித்துள்ளது.