கரோனா வைரஸ் காற்றில் பரவும் என பரிந்துரைகளை மாற்றக்கோரி உலக சுகாதார அமைப்பிற்கு ஆய்வாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுப் பரிந்துரைகளில், ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் விழும் பொருட்களை மற்றொருவர் தொட்டு, அந்தக் கைகளை முகத்தில் தேய்க்கும்போது கரோனா பரவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தும்மல் மற்றும் இருமலின் போது வெளிவரும் நுண்துகள்கள் காற்றில் பரவி, அதனை சுவாசிப்பவருக்கும் இந்த வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது என சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், இதற்கு ஏற்றாற்போல வழிகாட்டுப் பரிந்துரைகளை மாற்ற வேண்டும் என உலக சுகாதார அமைப்பிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். காற்றில் மூலம் கரோனா வைரஸ் பரவும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையை 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் ஆய்வாளர்கள் அடுத்த வாரம் வெளியிட உள்ள சூழலில் உலக சுகாதார அமைப்பிற்கு இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.