டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டெராய்டு மருந்து கரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்புவிகித்தைக் கணிசமான அளவு குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் இதுவரை 82 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நான்கு லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் கரோனாவைக் கட்டுப்படுத்த மருந்து கண்டறியும் பணிகள் பல நாடுகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதுபோல ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மருந்துகளில் எவையெல்லாம் கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டெராய்டு மருந்து கரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்புவிகித்தைக் கணிசமான அளவு குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தீவிர கரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களின், இந்த மருந்தைப் பயன்படுத்தினால் இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதேநேரம், லேசான கரோனா தொற்று உள்ளவர்களுக்கு இந்த மருந்து பெரிய அளவிலான பலன் எதையும் தரவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் இந்த மருந்து மிக மலிவான விலையில் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.