கரோனா பரவலால் அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வரும் சூழலில், உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை வெளிநாட்டினருக்கு H1B விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா.
கரோனா வைரஸ் பரவலால் தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள சூழலில், கடந்த நான்கு மாதங்களில் அமெரிக்காவில் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இந்தச் சூழலில் உள்நாட்டினருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், H1B உள்ளிட்ட பல்வேறு விசாக்களை வெளிநாட்டினருக்கு வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை தடைசெய்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான இந்த விசாவில் சுமார் 74 சதவீதம் வரை இந்தியர்கள் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில் H-2B, H-4, L-1, J-1 உள்ளிட்ட விசா வகைகளின் பயன்பாட்டை இந்த ஆண்டு இறுதி வரை அதிபர் ட்ரம்ப் தடை செய்துள்ளதால், இதனால் பயன்பெறும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், ஏற்கனவே பல தொழிலாளர்களுக்கு H1B விசா ஏற்பாடு செய்துள்ள நிலையில், இந்தத் தடையால், அவர்கள் இந்த ஆண்டு இறுதி வரை பணியில் பெறுவதும் தடைபட்டுள்ளது. ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலைக் கணக்கில் கொண்டு மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில், தொழில்துறையின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படாமல் ட்ரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அமெரிக்க நிறுவனங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.