பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையானப் பணப்பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கத்தில் அந்நாடு தனது நட்பு நாடுகளிடம் உதவிகளை எதிர்நோக்கி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும் பல்வேறு ஒப்பந்தங்களில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. சவுதி அரேபியாவின் $20 பில்லியன் முதலீட்டில் அதிகபட்சமாக, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள குவாடர் துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு மட்டும் $8 பில்லியன் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இரண்டு தரப்பினருக்கும் இடையே எரிசக்தி, எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளும், புரிந்துணர்வு ஒப்பந்தகளும் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், "இந்த முதலீடுகள் முதலாவது கட்டம்தான். இது கண்டிப்பாக ஒவ்வொரு மாதமும், ஆண்டும் வளர்ந்து இருநாடுகளுக்கும் பலனளிக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.