கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவிவரும் பொருளாதார சரிவு மற்றும் தேக்கநிலை ஆகியவை நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களையும், மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களையும் எழுப்பி வந்தது.
மத்திய அரசு சார்பில் இதுகுறித்து பெரிதாக எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து பேசினார். ஆனால் அவரது விளக்கம் போதுமானது அல்ல என்று கருத்துக்கள் எழுந்தன. இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் வலிமையற்றதாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட கடுமையான வீழ்ச்சியை இந்தியப் பொருளாதாரம் சந்தித்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசிய சர்வதேச நாணய நிதிய செய்தித்தொடர்பாளர் கெரி ரைஸ் கூறுகையில், "எதிர்பார்த்தைவிட இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. மேலும் கூடுதல் ஆய்வு செய்யப்பட்ட விவரங்களை வருகிற சர்வதேச பொருளாதார அவுட்லுக் மூலம் வெளியிடப்படும்" என கூறியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.