ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களைக் குறிவைத்து மசூதி ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடைபெற்ற இந்த தாக்குதலில், 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 53 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
மசூதியைக் குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் பிரிவான ஐஎஸ்-கே அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருக்கலாம் என கருதப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின்போதும், வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களைக் குறிவைத்து மசூதி ஒன்றின் மீது தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்ற அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்தனர்.