Skip to main content

பஞ்ச்ஷீர் வீழவில்லை; தலிபான்கள் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்துவிட்டார்கள் - தேசிய எதிர்ப்பு முன்னணி எச்சரிக்கை!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

national resistance front

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு தங்களின் இடைக்கால அரசை அமைத்துள்ளனர். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பாக பஞ்ச்ஷீர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான் கைகளுக்கு வந்துவிட்டபோதும் பஞ்ச்ஷீர் மாகாணம் தலிபான் எதிர்ப்பு குழுவின் வசம் இருந்தது.

 

தேசிய எதிர்ப்பு முன்னணி என பெயரிடப்பட்ட இந்த தலிபான் எதிர்ப்பு குழுவிற்கு அஹ்மத் மசூத் மற்றும் அம்ருல்லா சலேஹ் ஆகிய இருவரும் தலைமை தாங்கிவந்தனர். இந்தச் சூழலில் தலிபான்கள் பஞ்ச்ஷீர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக அறிவித்ததால், அஹ்மத் மசூத் மற்றும் அம்ருல்லா சலேஹ் நிலை குறித்து சந்தேகம் எழுந்தது. இருவரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில் அஹ்மத் மசூத் மற்றும் அம்ருல்லா சலேஹ் இருவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை எனவும், பஞ்ச்ஷீர் மாகாணத்தின் பெரும்பகுதி தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது எனவும் தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

 

அஹ்மத் மசூத்தின் செய்தித் தொடர்பாளரும், தேசிய எதிர்ப்பு முன்னணியின் வெளிநாட்டு உறவுகள் பிரிவு தலைவருமான அலி மைசம் நாசாரி இதுதொடர்பாக கூறியுள்ளதாவது, “தளபதி அஹ்மத் மசூத் மற்றும் அம்ருல்லா சலேஹ் இருவரும் ஆப்கானிஸ்தானில்தான் உள்ளனர். அவர்கள் தங்கள் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். மக்கள் எழுச்சி பெற்று காபூலில் உள்ள பயங்கரவாதிகளை எதிர்க்கிறார்கள்.

 

பஞ்ச்ஷீர் வீழ்ந்துவிடவில்லை. 60 சதவீத பஞ்ச்ஷீர் இன்னும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தந்திரமாக பின்வாங்கியுள்ளோம். தலிபான்கள் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்துவிட்டார்கள் அதற்கான விளைவுகளை அனுபவிப்பார்கள். இங்கு மனிதாபிமான நெருக்கடி உள்ளது. ஆனால் சர்வதேச சமூகம் அதைக் காணாமல் கண்களை மூடிக்கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் மீது ஏமாற்றம் அடைந்துள்ளோம்.”

இவ்வாறு அலி மைசம் நாசாரி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்