இந்தாண்டு மிகக் கடுமையான பனிப்புயலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் பொழிந்த பனிப்பொழிவில் இதுவே மிக மோசமான பனிப்பொழிவு என அமெரிக்க மக்கள் கூறுகின்றனர்.
மேலும், கிறிஸ்துமஸை கொண்டாட வேறு இடங்களுக்குச் செல்லும் மக்களின் சாலைவழிப் பயணமும் பனிப்புயலால் தடைப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடுமையான பனிப்புயல் தொடர்வதால் அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள ஏரிகள் உறைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் வீசிய கடுமையான பனிப்புயல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் நியூயார்க் நகரம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர்.
சாலையில் ஒரு அடிக்கும் மேலாக பனிக்குவியல் காணப்பட்டதால் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. தற்போது பனிப்புயலின் தாக்கம் குறைந்து இருந்தாலும் பனிப்பொழிவு இன்னும் குறையாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மக்களின் நலனுக்காக சாலைகளைச் சீரமைக்கும் பணிகளும் மீட்புப் பணிகளும் நடந்து வருகின்றன என்ற போதிலும் பனிப்பொழிவினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.