உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸின் பாதிப்பு இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு குறைந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனையொட்டி பிரான்ஸ் நாடு, இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் எதிர்பார்த்ததை விட விரைவாக கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து 10 நாட்களுக்கு முன்னதாகவே கட்டுப்பாடுகளை நீக்க முடிவெடுத்துள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 20 ஆம் தேதி முதல் அந்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது.
நாளை முதல், சில இடங்களைத் தவிர்த்து பிறபகுதிகளில் மக்கள் பொதுவெளியில் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை எனவும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் கூட்டமான இடங்களிலும், மைதானங்களிலும், பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும்போதும் முகக்கவசம் அணியவேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.